அந்த பள்ளிக் கூடத்தில் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ஒரு சுவை மிக்க சாக்லேட் கொடுத்தார். ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்தார். “குழந்தைகளே, கவனியுங்கள்! உங்கள் கையில் இருக்கும் சாக்லேட்டை 10 நிமிடங்கள் சாப்பிடாமல் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.” இவ்வாறு கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்.
வகுப்பு அறை முழுவதும் ஒரு கணம் அமைதி நிலவியது. எல்லா குழந்தைகளும் தங்கள் முன் இருக்கும் சாக்லேட்டை திகைப்போடு பார்க்கலாயினர். சாக்லேட்டை சாப்பிட வேண்டிய ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது; அவர்களால் அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை; மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
10 நிமிடங்கள் கழிந்ததும், ஆசிரியர் வகுப்பின் உள்ளே நுழைந்தார். இருக்கும் நிலைமையை ஆய்வு செய்தார்; ஒன்றைக் கண்டு பிடித்தார். ஒட்டு மொத்த வகுப்பில், 7 குழந்தைகள் மட்டுமே சாக்லேட்டை சாப்பிடாமல் அப்படியே வைத்து இருந்தார்கள் மற்ற குழந்தைகள் அனைவரும் சாக்லேட்டை சாப்பிட்டு முடித்த பின், அதன் நிறங்கள் பற்றியும், சுவை பற்றியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
ஆசிரியர் தனது டைரியில் ரகசியமாக அந்த 7 குழந்தைகள் பெயர்களைக் குறித்துக் கொண்டார். பிறகு பாடம் நடத்த ஆரம்பித்தார். அந்த ஆசிரியரின் பெயர்,“வால்டர் மிச்சேல் (Walter Mishchel)”. சில ஆண்டுகள் கழிந்தன; வால்டர் தனது டைரியைத் திறந்து 7 குழந்தைகள் பெயரையும் எடுத்துக் கொண்டார்; அவர்கள் தத்தம் துறையில் நல்லதொரு வெற்றியைப் பெற்றிருந்தார்கள்.
அதே போல், அந்த வகுப்பின் மீதி மாணவர்கள் பற்றியும் விசாரித்தார்; அதில் பெரும்பாலோர் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; இன்னும் சிலர் மிகுந்த கஷ்டத்தில் பொருளாதார, சமூக சூழல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்கள்.
வால்டரின் ஆராய்ச்சி, அவரை ஒரு வாக்கியத்துக்கு முடிவாக இட்டுச் சென்றது; அது என்னவெனில் –
“வெறும் 10 நிமிடங்களுக்குக் கூட பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதனால், ஒரு போதும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது”.
இந்த ஆராய்ச்சி, உலகளாவிய விதத்தில் பெரும் புகழைப் பெற்றது; அதனை, “மார்ஷ் மால்லோவ் கோட்பாடு (Marsh Mallow Theory) “ என்று அழைத்தார்கள். ஆசிரியர் வால்டர், அந்தக் குழந்தைகளுக்கு கொடுத்த சாக்லேட்டின் பெயர் “மார்ஷ் மால்லோவ்”.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், எப்போதும் உலகத்தில் உள்ள பெரும்பாலான, வெற்றிகரமான சாதனையாளர் எல்லாம், உருவாக்கப்படுவது “பொறுமை” யின் மூலமே; அத்துடன் வேறு பல குணங்களும் சேர்ந்திடும். ஒரு மனிதனது சகிப்புத்தன்மையை பொறுமை அதிகரிக்கச் செய்து விடுவதால், எவ்வளவு கடுமையான சூழ்நிலைகளிலும் அவர் துவண்டு போக மாட்டார்; தொடர்ந்து உத்வேகத்தில் இருப்பார்; ஒரு வெற்றிகரமான மனிதராக ஆகிவிடுவார்.
கருத்துகள்
கருத்துரையிடுக