ரபியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்த, ஒரு புனித துறவி. உலக வரலாற்றில் பெண் துறவிகளுக்கான வரிசையில், ரபியாவுக்கு ஒரு விஷேடமான இடம் உண்டு. சூஃபி இயக்கம் தோன்ற காரணமானவர் புனித ரபியாதான். இன்றும் உலகம் அவரை மிகவும் போற்றத் தக்க வகையில் நினைவில் வைத்து இருக்கிறது.
மிகவும் புகழ்வாய்ந்த இந்த பெண் துறவி தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளுமே அன்பாலும் கடவுளின் நிலையான நினைவிலும் வாழ்ந்தார். இவர் கிபி. 717 –இல் பிறந்து கிபி. 801 –இல், அவரது 84 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
ரபியா மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில், தன் பெற்றோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவள். அவள் குழந்தையாக இருக்கும் போதே, அவள் அம்மா இறந்து விட்டாள். அம்மாவின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல், அவளது குழந்தைப் பருவம் தனிமையில் கழிந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவளது துன்பங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
அவளது நாட்டில் மிகப் பயங்கரமான தண்ணீர் பற்றாக்குறையும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது. இதன் விளைவாக ரபியாவின் குடும்பத்தினர் அனைவரும் தனித்தனியாக ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர்.
சின்னஞ்சிறு சிறுமியான ரபியாவும் கடத்தப் பட்டாள்; அவள் வெறும் 6 டிர்ஹாம்ஸ் –க்கு அடிமையாக விற்கப்பட்டாள். அவளை அடிமையாக வாங்கிய அந்த எஜமானன் இதயமே இல்லாத ஒரு கொடுமைக்காரன். ரபியாவை அந்த மனிதன், மனிதத் தன்மை சிறிதும் கூட இல்லாமல் நடத்தினான். சாப்பிடுவதற்கு எதுவுமே கொடுக்காமல், நாள் முழுவதும் வேலை வாங்குவான்.
இந்த நிலைமையில் உடல் உழைப்பு என்பது மிகவும் கடினமானது. ஆனால், இந்த நிலைமையிலும் ரபியாவின் இதயம் எப்போதும் கடவுள் நினைவிலேயே மூழ்கி இருக்கும். இரவில் வெகு நேரம், விழித்து இருப்பாள். தன்னுடைய அதிகமான பொழுதை கடவுளைத் தொழுவதிலும், தியானம் செய்வதிலும் செலவழித்தாள்.
ஒரு நாள், அவள் எஜமானன் இரவில் வெகு நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினார். தற்செயலாக ரபியா இருக்கும் அறையைக் கடந்து செல்லும் போது, அங்கிருந்து ரகசியமான பேச்சுக் குரல் கேட்டது. உடனடியாக அவனுக்கு மனதில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. என்னுடைய அடிமை இரவில் இவ்வளவு நேரம் விழித்திருந்து, யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ?
ஜன்னல் வழியாக அவர் பார்த்த காட்சியும், அறையில் அவர் கேட்டதும் அவரை பேரதிர்ச்சி அடையச் செய்தன.
ரபியா முழுவதுமாக தெய்வீகத்தில் மூழ்கி இருப்பதை அவர் பார்த்தார். தெய்வீக ஒளி அவளை முழுமையாக சூழ்ந்து இருந்தது. அவள் முட்டுப் போட்டு தொழுது கொண்டிருந்த காட்சியில், தேவதை ஒருத்தி கடவுளை நோக்கி வணங்குவதைப் போல இருந்தது. அவள் மென்மையான குரலில், “ஓ பிரபுவே, என் எஜமானரை மன்னித்து விடு. அவரை ஆசீர்வதியுங்கள். “
ரபியா, தன் எஜமானர் தன்னை மோசமாக நடத்திய போதும், அவருக்காக எப்போதுமே கடவுளிடம் தொழுது கொண்டிருப்பாள். அந்த எஜமானர் அவளை எத்தனையோ முறை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்; வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிறைய தொல்லைகளும் கொடுத்திருக்கிறார்; அப்படி இருந்தும் அவரை ஆசீர்வதிக்கும் படி கடவுளிடம் வேண்டுகிறார்.
அல்லா! என் மாஸ்டர் மீது கருணை காட்டுங்கள்; அவருக்கு செல்வத்தை அருளுங்கள்; அவருடைய தவறுகளை மன்னித்து விடுங்கள்; அவரை நேர்மையான வழியில் அழைத்துச் செல்லுங்கள்; அவர் உங்களிடம் வரும்படி அவருக்கு ஏதாவது செய்யுங்கள். கடவுளே, என்று தொழுதாள். நீங்கள் எப்போதும் அன்பால் நிறைந்தவர். தயவு செய்து, என் எஜமானருக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுங்கள்.
இதையெல்லாம் பார்த்த எஜமானர் ஒட்டு மொத்தமாக அதிர்ச்சி அடைந்தார். வெட்கத்தால் நடுங்கினார். அவளின் பிரார்த்தனையைக் கேட்டு குற்றவுணர்வுக்கு ஆளானார். அவர் தன்னுடைய அறைக்குத் திரும்பினார். இரவு முழுவதும் அவரால் தூங்கவே முடியவில்லை. ரபியாவுக்கு தான் மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டதை உணர்ந்தார். தான் கடுமையான குற்றத்திற்கு ஆளாகி விட்டதையும் உணர்ந்தார். இவள் சாதாரணமான அடிமை அல்ல; கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு குழந்தை; இவள் ஒரு தெய்வீக ஆன்மா, என்பதைப் புரிந்து கொண்டார். நான் இவளை அடிமையாக வேலை செய்யும்படி நடத்தி இருக்கிறேன்.
அடுத்த நாள் காலை அவர் ரபியாவின் அறைக்குச் சென்று அவள் பாதங்களில் விழுந்து, மன்னிப்புக் கேட்டார்: “கடவுளின் அன்புக் குழந்தையே! நான் உனக்கும், அல்லாவுக்கும் செய்த தவறுகளுக்காக தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடு; இன்றிலிருந்து நீ என் வீட்டில் வந்து தங்க வேண்டும்; அடிமையாக என் வீட்டில் இருக்க வேண்டாம்; ஆனால், மரியாதைக்குரிய ஒரு விருந்தினராக நீ இருக்க வேண்டும். தயவு செய்து நான் அந்த மாபெரும் அல்லாவுக்கும் தொண்டு செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு” என்று வேண்டினார்.
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று.
குற்றங்களை மறந்து விடும்
மனத்தால் ஒன்று.
கள்ளமில்லா உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம் என்றும்
கண்ணெதிரே தோன்றுகின்ற
தெய்வங்கள் ஆனார்.
– என்ற கவியரசின் பாடல் வரிகள் ரபியாவின் வாழ்க்கைக்கு நிரூபணம் ஆகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக