ஒரு நகரின் மத்தியில் இருக்கும் ஒரு குறுகலான தெருவில்,
பூட்டு-சாவி விற்கும் ஒரு பழைய கடை இருந்தது. மக்கள் தங்களுக்குத் தேவையான பூட்டு சாவிகளை அங்கு வந்து வாங்குவார்கள். சில வேளைகளில், தங்களின் உண்மையான சாவியைத் தொலைத்து விட்டால், அதற்கான மாற்று சாவியைப் பெற்று செல்வார்கள்.
இந்தக் கடையில் ஒரு கனமான சுத்தியலும் இருந்தது. எப்போதாவது பூட்டை உடைக்க அது பயன்படும்.
அந்த சுத்தியல், ஒரு விஷயத்திற்காக அடிக்கடி வியப்பிற்கு உள்ளானது. அது என்னவென்றால், இந்த சிறிய சாவிகள் இந்த கனமான பூட்டுக்களை மிக லகுவாக திறந்து விடுகிறது. அதே நேரத்தில் நான், அந்த பூட்டைத் திறப்பதற்காக எத்தனையோ தடவைகள் அதை அடிக்க வேண்டி இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டது.
இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அதனால் இருக்கவே முடியவில்லை. கடை மூடியவுடன், அந்த சுத்தியல் ஒரு சிறிய சாவியைப் பார்த்து, “ சகோதரியே, கடினமான பூட்டுகளைக் கூட நீ மிக லகுவாக திறந்து விடுகிறாயே ! இதற்கு உன்னிடம் இருக்கும் சக்திதான் என்ன? ஆனால் அதே நேரம் நான் மிக சக்திவாய்ந்தவனாக இருந்தும் என்னால் அதை திறக்க முடியவில்லையே !” என்று கேட்டது.
அந்த சாவி புன்சிரிப்போடு, உண்மையாக நீ உன்னுடைய விசையைச் செலுத்தி பூட்டைத் திறப்பதற்காக அதை அடித்து உடைத்து விடுகிறாய். நான் ஒரு போதும், பூட்டை சிறிதளவு கூட துன்புறுத்தியது இல்லை. நான் அவனது இதயத்தைத் தொட்டு அங்கு எனக்கு ஒரு இடத்தைத் தயார் செய்து கொள்கிறேன். அதன் பிறகு நான் அவனிடம் திறந்து விடு என பணிவாகக் கேட்கிறேன். உடனே அவனும் திறந்து விடுகிறான்.
நண்பர்களே, மனித வாழ்க்கையிலும், இதே மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் யாராவது ஒருவரை வெற்றி கொள்ள வேண்டும் என்று விரும்பினால், நாம் அவரை நமக்கு சொந்தமாக்கி, அதன் பிறகு அவரது இதயத்தினுள் இடம் பிடிக்க வேண்டும்.
அதிகாரத்தால் சில பேரை நாம் ஏதாவது சில வேலைகளை செய்ய வைக்க முடியும். ஆனால் அந்த வழியில் நாம் பூட்டைத் திறக்க முடியாமல், அதற்குப் பதிலாக அதை உடைத்து விடுகிறோம்.
அதாவது, நாம் அந்த மனிதருடைய பயன்பாட்டையும், அவரது உள்ளார்ந்த திறமையையும் அழித்து விடுகிறோம். அதே நேரத்தில், நாம் அன்பினால் ஒருவரது இதயத்தை வெற்றி கொள்வோமானால், நாம் எப்போதும் அவரை நம் நண்பராக்கிக் கொள்வோம்; அவரது பயன்பாட்டையும், திறமையையும் பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.
அதிகாரத்தால் அடையக் கூடிய எதை வேண்டுமானாலும் நீ அன்பால் சாதிக்க முடியும், ஆனால் அன்பால் சாதிக்க முடிந்த எந்த ஒன்றையும் நீ அதிகாரத்தால் சாதிக்க முடியாது.
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
மனதின் மீது வைத்த அன்பு பக்தியானது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது .
என்ற கவிஞரின் பாடல் வரிகள் இதற்கு நிரூபணம் ஆகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக