அமெரிக்காவில் மசேச்சுசெட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள டெக்ஸ்பரி இன்ஸ்டிடியூட், ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் புகலிடம் தரும் இடம் ஆகும்.
ஆன்னி என்ற இளம் சிறுமி அவளது அம்மாவின் மறைவிற்குப் பிறகு, இந்தப் புகலிடத்திற்கு அனுப்பப்படுகிறாள். அவளது நடத்தை மிகவும் சீர்கேடான நிலையில் இருந்தது. அவளுக்கு, யாருமே எதுவுமே செய்ய முடியாத நிலைமைதான் இருந்தது. அவள் அருகில் யார் சென்றாலும், அவர்களை கடித்து வைப்பாள்; சீறிப் பாய்வாள்; அவர்கள் கொடுத்த உணவை அவர்கள் மீதே வீசி எறிவாள். டாக்டர்களும், நர்சுகளும் கூட, அவள் அருகில் சென்று அவளைப் பரிசோதிக்க முடியாது. யாராவது அருகில் சென்றால், அவர்கள் மீது எச்சில் உமிழ்ந்து விடுவாள்; கீறி விடுவாள். அவளது இந்த மோசமான செயல்களால், அவளை அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் இருக்கும் ஒரு சிறைச்சாலை மாதிரியான சிறிய அறை ஒன்றில் அடைத்து வைத்தார்கள்.
அங்கே வேலை செய்யும் ஒரு வயதான பெண் மணி இவை அனைத்தையும் கவனித்தாள். இந்த சிறுமிக்காக மிகவும் வருத்தப்பட்டாள். ஆன்னி, அந்த சிறையில் அடைபட்டுக் கிடப்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஆன்னிக்கு உதவி செய்ய விரும்பினாள். ஆனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்தாள். டாக்டர் நர்சுகளால், ஆன்னிக்கு உதவி செய்ய முடியாமல் இருக்கும் போது, தன்னால் எப்படி உதவிட முடியும் என்று நினைத்தாள்.
ஒரு நாள் இரவு, வேலை முடிந்த பிறகுஅந்த வயதான பெண்மணி ஆன்னிக்காக, ஒரு சிறிய கேக்கை செய்தாள்.
அடுத்த நாள் காலை, அந்த கேக்கை எடுத்துக் கொண்டு, ஆன்னி இருந்த அந்த சிறிய அறையின் முன் சென்றாள். ஆன்னி! “உனக்காக இந்த கேக்கை நான் செய்து வந்து இருக்கிறேன். நான் இதை இங்கே வைத்து விடுகிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் இதை எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு உடனே திரும்பி விட்டாள். ஆன்னி தன் முகத்தில் வீசி எறிந்து விடுவாளோ என்ற பயத்தில் வேகமாகத் திரும்பினாள். ஆன்னி அந்த கேக்கை எடுத்து சாப்பிட்டாள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆன்னி இந்த வயதான பணிப்பெண்ணிடம், இனிமையாக நடந்து கொண்டாள். சில சமயங்களில் இருவரும் பேசிக் கொள்வார்கள். ஒரு முறை வயதான அந்தப் பணிப்பெண் ஆன்னியை சிரிக்கும்படி செய்தாள். நர்சுகளில் ஒருத்தி, இதைப் பார்த்து விட்டு டாக்டரிடம் சென்று கூறினாள். டாக்டர், அந்தப் பணிப் பெண்ணிடம் வந்து, “நீங்கள்தான், நாங்கள் ஆன்னிக்கு செய்யும் சிகிட்சையில், எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார். பணிப்பெண்ணும் அதற்கு சம்மதித்தார். எப்போதெல்லாம் டாக்டர் ஆன்னியை பரிசோதிக்க விரும்புகிறாரோ, அப்போது ஆன்னி அறைக்கு முதலில் அந்த பணிப் பெண் சென்று, அவளிடம் விபரமாகக் கூறி, அவளை அமைதிப் படுத்தி, அவள் கையைப் பிடித்துக் கொள்வாள். அதன் பிறகுதான், டாக்டர், ஆன்னியைப் பரிசோதிப்பார். ஆன்னி பார்வை முற்றும் இழந்தவள் என்பதை, அதன் பிறகுதான், டாக்டரால் கண்டு பிடிக்க முடிந்தது.
ஒரு வருடம், டாக்டர்கள் ஆன்னிக்காக சிகிட்சை கொடுத்தனர். கண்பார்வை இல்லாதவர்களுக்காக இருக்கும், பெர்க்கின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஆன்னியை சேர்த்தனர். அங்கு உள்ளவர்கள் ஆன்னிக்கு உதவி செய்தனர். அங்கேயே ஆன்னி தங்கினாள். அவள் படித்து ஆசிரியை ஆனாள். அதன் பிறகு ஆன்னி, டெக்ஸ்பரிக்குத் திரும்பினாள். தான் சிறுமியாய் இருந்த போது, இருந்த அந்த இன்ஸ்டிடியூட்டில் ஏதாவது பணி செய்ய வேண்டும் என்று விரும்பினாள். முதலில், அங்கு இருந்த பொறுப்பாளர், ஆன்னிக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை. சிறிது நேரத்திற்கு முன், அவருக்கு வந்த ஒரு கடிதத்தைப் பற்றி நினைத்தார்.
ஒரு மனிதர், தன்னுடைய மகளைப் பற்றி எழுதிய கடிதம் அது. அந்த சிறுமி கட்டுப்பாடுகளை மீறியவளாகவும்; ஒரு மிருகம் போலவும் இருக்கிறாள். அவள் கண் பார்வை அற்றவள்; கேட்கும் திறன் அற்றவள்; மன நோயாளியாகவும் இருக்கிறாள். அந்த மனிதனுக்கு என்ன செய்ய என புரியாமல் இருக்கிறார். தன் மகளை, ஏதாவது ஒரு புகலிடத்தில் விடவும் அவருக்கு விருப்பம் இல்லை. டெக்ஸ்பரி இன்ஸ்டிடியூட்டுக்கு கடிதம் எழுதினார். ஒரு ஆசிரியை வீட்டுக்கு வந்து, தன் மகளை வீட்டில் இருந்தே கவனித்துக் கொள்ள, நீங்கள் உதவ வேண்டும் என்று எழுதினார்.
ஆன்னி அங்கு சென்றாள். அந்த சிறுமியைக் கவனித்தாள். வாழ்நாள் முழுவதும் அவள் கூடவே இருந்தாள். அந்த சிறுமிதான் பின்னாளில் நோபல் பரிசு பெற்ற ஹெலன் ஹெல்லர்.
ஹெலன் ஹெல்லர், நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட சமயத்தில், அவளைப் பேட்டி காண வந்தவர்கள், அவளிடம், “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இந்த நிலைமைக்கு வர உதவியவர் யார்?” என கேட்டனர். அதற்கு ஹெலன், ஆன்னி சுலைவன் என்றாள். ஆன்னியின் முழுப் பெயர் அது. ஆன்னி, உடனே இல்லை என மறுத்து, ஹெலன், “நம் இருவரது வாழ்க்கையிலும், மிகச் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியது டெக்ஸ்பரி இன்ஸ்டிடியூட்டில் வேலை செய்த, அந்த வயதான பெண்மணிதான்” என்றாள்.
இரக்கத்தோடும், அன்போடும் செய்யும் ஒரு சிறிய செயல், என்றும் மாறாத ஒரு சிறந்த தாக்கத்தை, மனித சமுதாயத்தில் ஏற்படுத்தும்.
ஆன்னிக்கு அந்த வயதான பணிப்பெண் இரக்கம் காட்டி, அன்புடன் ஒரு சிறிய கேக்கைக் கொடுத்தாள். அவளது அன்பும் இரக்கமும், ஆன்னியின் வாழ்க்கையை உயர்த்தி அவளை ஆசிரியை ஆக்கியது. ஆன்னி அந்த இரக்கத்தையும் அன்பையும் ஹெலனுக்குக் காட்டினாள். ஹெலன் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு அவளை உயர்த்தி தகுதி பெறச் செய்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக