முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அந்த அரசர் தன் அமைச்சரிடம், “செம்மறி ஆடுகளின் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவை மந்தை மந்தையாய் இருக்கின்றன. அதே நேரத்தில் நாய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. ஏன் இப்படி?” என்று கேட்டார்.
அமைச்சர் அரசரிடம், “எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை இதற்கு நான் பதில் கூறுகிறேன் என்றார்”. அன்று மாலை அமைச்சர் இரண்டு அறைகளை தயார் செய்தார். அரசரும் அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார். ஒரு அறையில் 20 செம்மறி ஆடுகளை வைத்து, அந்த அறையின் நடுவே ஒரு கூடை நிறைய ஆடுகளுக்கு உரிய உணவை அதில் அமைச்சர் வைத்தார். பின்பு, அந்த அறையை பூட்டி விட்டார்.
அடுத்த அறையில் 20 நாய்களை வைத்து, அந்த அறையிலும் ஒரு கூடை நிறைய ரொட்டிகளை உணவாக வைத்தார். பிறகு அந்த அறையையும் பூட்டி விட்டார்.
அடுத்த நாள் காலை அமைச்சர் அரசருடன் அங்கு வந்தார். முதல் அறையின் கதவை திறந்தார். ஆடுகள் அனைத்தும் ஒன்றன் மீது ஒன்றாக தலை சாய்த்து வசதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தன. உணவு வைத்திருந்த கூடை காலியாக இருந்தது.
அமைச்சர் நாய்கள் இருந்த அடுத்த அறையைத் திறந்தார். அனைத்து நாய்களும் இறந்து கிடந்தன. கூடையில் இருந்த ரொட்டிகள் அப்படியே இருந்தன. மன்னர் ஆச்சரியம் அடைந்தார். அமைச்சர் அரசரிடம், “ நாய்கள் ஒரு சிறிய துண்டு ரொட்டியைக் கூட உண்ணாமல், ஒன்றுக்கொன்று சண்டை போட்டு இறந்து விட்டன. ஆனால், ஆடுகளோ, தங்கள் உணவை பகிர்ந்து தின்று, அமைதியாக தூங்குகின்றன. ஆடுகளின் பிறப்பின் விகிதம் அதிகரிப்பதற்கு, இதுதான் காரணம் என்று அமைச்சர் கூறினார். நாய்களோ தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டன.
அரசர் அமைச்சரின் விளக்கத்தைக் கேட்டு மிகவும் திருப்தி அடைந்தார். அமைச்சருக்கு நிறைய வெகுமதிகள் கொடுத்தார். பரஸ்பர அன்பும், சகோதரத்துவமும் முக்கியம் என்பதை அரசர் உணர்ந்தார்.
அமைச்சர் அரசருக்கு இந்த கருத்தின் அடிப்படையில் மற்றொரு கதையைக் கூறினார்.
முன்னொரு காலத்தில், பிரம்மா தேவர்களையும், அசுரர்களையும் தன் அவைக்கு அழைத்து ஒரு விருந்து வைத்தார். இருவரையும் பிரம்மா ஒன்று போல நடத்தினாலும், தேவர்களுக்கு சிறிது அதிக மரியாதை கொடுத்து நடத்தினார். அசுரர்கள், பிரம்மா தங்களை விட தேவர்களுக்கு அதிக உபசரிப்பும், மரியாதையும் கொடுத்து விட்டு, வெளியே இருவரையும் ஒரே மாதிரி நடத்துவது போல நடிக்கிறார் என்பதை உணர்ந்தனர்.
அசுரர்கள் பிரம்மாவிடம்,“ நீங்கள் தேவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்; இதய பூர்வமாக அவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கிறீர்கள். பிறகு, எதற்காக எங்களை இங்கு வரவழைக்கிறீர்கள்?” என்றனர்.
பிரம்மா எவ்வளவோ விளக்கம் கூறியும் அசுரர்களை சமாதானம் செய்ய முடியவில்லை. எனவே பிரம்மா கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். அசுரர்கள் ஒரு போதும் தேவர்களுக்கு சமமாக இருக்க முடியாது என்பதை அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.
பிரம்மா அசுரர்களின் அரசனிடம், “ நீங்கள் தேவர்களைப் போல ஆகி விட்டால், நான் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் தோல்வி அடையக் கூடாது” என்றார். “நாங்கள், தேவர்களை விட முன்னேறிதான் இருக்கிறோம் என்று அசுரர்களின் அரசன் உறுதிபட கூறினான்”.
நீங்கள் தவறாக நினைக்காமல் இருந்தால், நான் உங்களுக்கு ஒரு சோதனை வைக்கிறேன், என்றார் பிரம்மா. அதற்கு அசுரர்களின் அரசன் சம்மதித்தான்.
விருந்து சாப்பிடும் நேரத்தில், பிரம்மா தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரது கைகளையும் கம்புடன் சேர்த்து இறுக்கமாகக் கட்டி விட்டார். விரல்கள் வரை கட்டி விட்டார். எனவே ஒருராலும் கையை மடக்க முடியாது.
முதலில் பிரம்மா, அசுரர்கள் முன்பு தட்டு நிறைய லட்டுகளை வைத்தார். யார் அதிக லட்டுகளை உண்கின்றார்களோ அவர்கள்தான் சிறந்தவர்கள் என்றார் பிரம்மா.
அசுரர்கள் லட்டை கையில் எடுத்தனர். கைகள் இறுக்கமாகக் கட்டி இருப்பதால், லட்டை வாய் அருகில் கொண்டு போக முடியவில்லை. அவர்கள் லட்டை எறிந்து வாயில் செல்லும் படி முயற்சி செய்தார்கள். அதுவும் முடிய வில்லை.
நிறைய முயற்சிகள் செய்தும், ஒருவர் கூட வெற்றி பெற முடிய வில்லை.
இப்போது, தேவர்களை அழைத்து அவர்கள் முன் தட்டில் லட்டுகளை பிரம்மா வைத்தார். தேவர்கள் கைகளும் கட்டப்பட்டுதான் இருந்தன. தேவர்கள் ஜோடி ஜோடியாக அமர்ந்து ஒருவருக்கொருவர் லட்டை ஊட்டி விட்டனர்.
அசுரர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கவனித்து பார்த்தனர். முடிவில், அசுரர்கள், தேவர்கள் தங்களை விட சிறந்தவர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர்.
அமைச்சரின் இந்தக் கதையைக் கேட்டு அரசர், மிக்க மகிழ்ச்சி அடைந்தார். எந்த செயலுமே அதில் ஒற்றுமையும், அன்பும் இருந்தால் அதனை நல்ல முறையில் சாதிக்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக