மகாகவி காளிதாசரைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து இருக்கிறோம். அவரது காலத்தில் அவர் ஒரு சிறந்த புலவர்; கவிஞர்; மிகச் சிறந்த அறிஞர். அவரைப் பற்றிய கதைதான் இது.
ஒரு முறை காளிதாசர் மிகப் பெரிய காட்டின் வழியாக நடந்து கொண்டு இருந்தார். அந்தக் காட்டைக் கடக்க வெகு நேரம் ஆயிற்று. சூரியன் மிகக் கடுமையாக அனலை வீசிக்கொண்டு இருந்தது. வெயிலின் கடுமை அவரது சக்தி முழுவதையுமே உறிஞ்சி எடுப்பது போல இருந்தது. கதிரவனின் அனல் கதிர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கிய போதும், அவர் அதை குறையாக எண்ணவில்லை; அவரால் அதை எதுவும் செய்ய இயலாது. தண்ணீர் தாகம் அவரைப் பாதித்தது.
தாங்க முடியாத அளவுக்கு அவருக்கு தாகம் எடுத்த போது, தண்ணீர் குடத்தோடு ஒரு பெண் மணி அவரைக் கடந்து செல்வதைப் பார்த்தார். அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் ஆனது. அந்த பெண்ணை நோக்கி, வேகமாக நடந்து சென்றார். “அம்மா! இந்த வெயில் என்னை மிகவும் கடுமையாக வாட்டுகிறது; தாங்க முடியாத தாகத்தால் என் தொண்டையில், முள் குத்துவது போல் உணர்கிறேன். தயவு செய்து என் மீது இரக்கம் காட்டி, கொஞ்சம் தண்ணீர், தா” என கேட்டார்.
அந்த பெண், “மகனே! உன்னுடைய உணர்வை நான் அறிந்து கொண்டேன். இந்த தண்ணீர் உன் தாகத்தை தணித்து விடும். நீ யார் என்பதை அறியாமல் நான் உனக்கு தண்ணீர் தரப் போவது இல்லை. நீ யார் என்று கூறு” என்றாள்.
காளிதாசர் தன் பேச்சினால் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை.
அவருடைய வாயில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் அவருடைய வறண்ட தொண்டையை மேலும் புண் படுத்தியது. எனவே அவர் வேகமாக பதில் அளித்தார். மிக நல்லது. என்னை ஒரு பரதேசி என வைத்துக் கொள்.
அதற்கு அந்த பெண்மணி,“ மகனே, உன்னை எப்படி நான் பரதேசியாக ஏற்றுக் கொள்ள முடியும்?. இந்த பிரபஞ்சத்தில், இரண்டு பரதேசிகள்தான் இருக்கின்றனர். அவை சூரியனும், சந்திரனும். ஒரு போதும், தங்களின் அசைவை நிறுத்தாமல், எப்போதும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றன. தயவு செய்து, உன்னைப் பற்றிய உண்மையை கூறு” என்றாள்.
இந்தப் பதிலைக் கேட்டு, அதிர்ச்சியுற்ற காளிதாசர், தனது தொண்டையை சரி செய்து கொண்டு, “ என்னை ஒரு விருந்தினராக, நீ நடத்தலாம் அல்லவா?” என்றார்.
அந்தப் பெண்,“ உன்னை விருந்தினராக நடத்த முடியாது. வாழ்க்கையில் இரண்டே இரண்டு விருந்தினர்கள்தான் உண்டு.
செல்வமும், இளமையும். அவை இரண்டும் நிச்சயமாக வரும்; பிறகு போய் விடும். கோடிக் கணக்கான முறைகள் நாம் வேண்டினாலும், அவை நம்முடன் தங்காது. நீ யார் என்பதைக் கூறு” என்றாள்.
காளி தாசருக்கு அந்தப் பெண்மணியின் தத்துவார்த்தமான பேச்சுத் திறமையைக் கேட்டு, பதில் கூற சொற்கள் இல்லாமல் திணறினார். அந்தப் பெண்ணின் வாதங்கள் அவரை மேலும் வலிமைப் படுத்தின. “தாயே! நான்தான் பொறுமை” என்று பதிலளித்தார்.
திரும்பவும் அந்தப் பெண்மணி, இந்தப் பதிலை ஒப்புக் கொள்ளவில்லை. என்னால் இப்படி நினைக்க முடியவில்லை. அதாவது, நீதான் பொறுமை என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. இந்த உலகத்திலேயே, இரண்டே இரண்டுதான் பொறுமையின் அடையாளங்கள். ஒன்று அன்னை பூமி நாம் செய்யும் அனைத்துப் பாவங்களையும் மவுனமாகத் தாங்கிக் கொள்கிறாள். இரண்டாவது நம்மை சுற்றி இருக்கும் மரங்கள். தனக்குத் தீங்கு செய்யும் மக்களுக்குக் கூட, நன்மையை செய்கிறது. மரங்கள் ஒட்டு மொத்தமாக தன்னையே தானமாக மக்களுக்குத் தருகிறது; எப்போதும் தருகிறது; பாகுபாடு இன்றி தருகிறது. எனவே, நீ பொறுமை அல்ல.
காளி தாசர் பெண்மணியின், வாக்கு வாதங்களால் எரிச்சல் அடைந்தார். தண்ணீர் தாகம் மேலும் எரிச்சல் அடையச் செய்தது. இனிமேல் நாமும் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தார். “நான் என்றுமே நிரந்தரமானவன்; அழிபவன் அல்ல” என்றார்.
அதற்கு அந்தப் பெண்மணி மிகவும் அமைதியாக, “இல்லை. என் குழந்தாய்! நீ நிரந்தரமானவன் அல்ல. நகமும், முடியும் – இவை இரண்டும் தான் நிரந்தரமானவை. நீ எத்தனை முறை வெட்டினாலும், அவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே உண்மையைச் சொல் நீ யார்?”
காளி தாசர் பொறுமை இழந்து விட்டார். சிறிது அளவு தண்ணீருக்காகவா இப்படி என்னை சொற்களால் வாட்டுகிறாள். நல்லதுதான். “நான் ஒரு முட்டாள் என வைத்துக் கொள்” என்றார்.
இதையும் நான் உணமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பூமியில் இரண்டே இரண்டு முட்டாள்கள்தான் உள்ளனர். அதில் நீ ஒருவன் அல்ல. முதல் முட்டாள் – எந்த விதமான தகுதியும் இல்லாமல் நாட்டை ஆள்பவன். தகுதியே இல்லாத அந்த மன்னனிடம் தாங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள், இரண்டாவது முட்டாள், என்றாள். அந்தப் பெண்மணியின் அறிவுத் திறமையைப் பார்த்து காளிதாசர் பிரமிப்பு அடைந்தார் உலகம் இது வரைக் காணாத மிகப் பெரிய சமஸ்கிருதப் புலவர் என தன்னை எண்ணிக் கொண்டு இருந்த காளிதாசர், படிப்பறிவு இல்லாத அந்த வயதான பெண்மணி முன் நிற்க முடியாமல் திணறினார்.
தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு, அந்த பெண்ணின் பாதங்களில் விழுந்து கதறுகிறார். “அம்மா, நான் எப்படிப் பட்ட முட்டாள் என்பதை உணர்ந்து விட்டேன். எல்லாம் அறிந்தவன் என என்னை நானே கர்வப்பட்டதை உனது சந்திப்பும்; இந்த வாக்கு வாதங்களும் தகர்த்து விட்டன. என்னைப் பற்றி நானே வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை. என்னுடைய அறியாமையை மன்னித்து விடு. எனக்கு இரக்கம் காட்டு தாயே!. தயவு செய்து தண்ணீர் தா” என பணிவோடு கேட்டார்.
தனது தலையை உயர்த்தி கண்ணீர் மல்கிய கண்களோடு அந்த பெண்ணைப் பார்க்கும் சமயம், அவர் என்ன பார்க்கிறார்; அவர் அங்கு இருக்கிறாரா; தண்ணீர் தாகமா; தனது தோல்வியா; அல்லது கனவா என திகைக்கின்றார். அந்தப் பெண்மணியின் இடத்தில் சந்திர ஒளி போல் மின்னும் ஒரு மாபெரும் உருவம் நின்றது. அது வேறு யாரும் அல்லர். சரஸ்வதி தேவியே ஆகும். தனது தெய்வீக பிரசன்னத்தை காளிதாசருக்கு அருளினார். அவள் பேசிய அந்த குரல் இந்த வெயிலின் அனலுக்கு தண்ணீரை விட குளுமையாக இருந்தது.
சரஸ்வதி தேவி புன் சிரிப்போடு, காளி தாசரைப் பார்த்து, “ எழுந்திரு என் குழந்தாய்! நீ மிகப் பெரிய அறிவாளி. உன்னுடைய எழுத்துக்கள் பிறரை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை. இருந்தாலும், உன்னுடைய அகங்காரத்தினால், அவை சிறுமைப் படுத்தப் பட்டன. ஆகவேதான், நானே வந்து இப்படி ஒரு பாடத்தை உனக்குக் கற்பித்து வழி காட்ட வந்தேன்” என்றாள்.
ஒரு அறிவாளியின் அடையாளம் அவரது அறிவுத் திறமை மட்டுமல்ல. பணிவுதான் மிக முக்கியம். பணிவு இல்லாத அகங்காரம் நிறைந்த புலமை பயனற்றது. வாழ்க்கையே வீணாகி விடும். உன்னைப் போன்ற புலமை வாய்ந்த மனிதன், உன்னுடைய சாதனைகளை வைத்து, கர்வப்படக் கூடாது. எல்லாம் அறிந்து விட்டேன் என எண்ணக் கூடாது. நீ இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறாய். “என் குழந்தாய், கற்றது கை அளவுதான். கல்லாதது உலகளவு.”
காளிதாசர் எழுந்து தன்னுடைய கையைக் குவித்து தேவியை வணங்கினார். தன்னுடைய அறியாமையை நீக்கியதற்காக, நன்றி கூறினார். தன்னுடைய தவறை உணர்ந்து விட்டதாகக் கூறினார். இந்த விவேகத்தைக் கொண்டு நிரந்தரத்திற்கும் செல்வதாக கூறினார்.
சரஸ்வதி தேவி புன் சிரிப்புடன் தண்ணீர் பானையைக் கொடுத்தாள். நன்றி உணர்வோடு, ஒளி நிறைந்த கண்களோடு அந்த தண்ணீரை, காளிதாசர் பருகினார். அமுதத்தை விட, இனிமையாக இருந்தது அந்த தண்ணீரின் சுவை! அவரது தாகத்தை மட்டும் அது தணிக்கவில்லை; அவரது அறிவு தாகத்தையும் சேர்த்து தணித்தது.
இந்தக் கதை இத்துடன் முடிந்தாலும் நமக்கு முடிவே இல்லாத ஒரு செய்தியைத் தருகிறது. கடவுள் நமக்கு அருள் மழையாகத் தருகின்ற எதுவுமே மற்றவர்களுக்குப் பயன் படாவிட்டால், அவை அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக